புதுச்சேரியில் இரத்தமாற்று சேவைகள் குறித்து ஆட்சியர் குலோத்துங்கன் தீவிர ஆய்வு: ஏனாமில் புதிய இரத்த மையம் அமைக்க உத்தரவு!

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்டத்தில் இரத்தமாற்று சேவைகளின் தற்போதைய நிலை, இரத்தம் மற்றும் இரத்தக் கூறுகளின் இருப்பு மற்றும் அவசரகால இரத்தத் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் இரத்த மையங்களின் செயல்பாடுகள், உரிமங்கள், இரத்த சேகரிப்பு மற்றும் இரத்தக் கூறுகள் பிரித்தெடுக்கும் கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, ஏனாம் பகுதியில் புதிய இரத்த மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும், காரைக்கால் மற்றும் மாஹே பகுதிகளில் இரத்தக் கூறுகள் பிரித்தெடுக்கும் வசதிகளைத் துரிதமாக ஏற்படுத்தவும் சுகாதாரத்துறைக்கு ஆட்சியர் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.
மேலும், நடமாடும் இரத்த சேகரிப்பு வாகனம் (Blood Mobile Van) மற்றும் இரத்தப் போக்குவரத்து வாகனங்களைப் புதுப்பிக்கவும், புதிய வாகனங்களைப் பெற சி.எஸ்.ஆர் (CSR) பங்களிப்புகளைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து இரத்ததான முகாம்களைத் தீவிரப்படுத்தி, பொதுமக்களுக்கு தடையின்றி இரத்தம் மற்றும் இரத்தக் கூறுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.


