வீடு கட்ட விமான நிலைய ஆணையத்தின் NOC நிபந்தனையை தளர்த்தக் கோரிக்கை: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவிடம் எம்.எல்.ஏ அழகு மனு!

புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடுத்தர மக்கள் வீடு கட்டுவதற்கு ஏதுவாக, விமான நிலைய ஆணையத்திடமிருந்து பெற வேண்டிய உயர வரம்பு தடையில்லாச் சான்றிதழ் (Height Clearance NOC) நிபந்தனையில் தளர்வு அளிக்க வேண்டும் என்று சிவில் ஏவியேஷன் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவிடம் கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். அழகு @ அழகானந்தம் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட கதிர்காமம், இந்திரா நகர், தட்டான்சாவடி மற்றும் உழவர்கரை உள்ளிட்ட பகுதிகளில் தரை மற்றும் முதல் தளம் (G+1) வரையில் சிறிய அளவில் வீடு கட்டும் நடுத்தர மக்கள்கூட இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இந்த நடைமுறையால் புதுச்சேரி திட்டக்குழும (PPA) அனுமதி பெறுவதற்கு ஓராண்டுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் நடுத்தர மக்களின் சொந்த வீடு கட்டும் கனவு பாதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எம்.எல்.ஏ அழகு, சாதாரண மக்கள் கட்டும் G+1 வீடுகளுக்கு 30 மீட்டர் (சுமார் 100 அடி) வரை விமான நிலைய ஆணையத்தின் NOC பெறுவதிலிருந்து முழு விலக்கு அளித்து, உடனடியாக PPA அனுமதி வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இக்கோரிக்கையைத் தொடர்ந்து, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் உடனடியாக நகரமைப்பு திட்டமிடல் துறை மற்றும் சுற்றுலா-சிவில் ஏவியேஷன் துறை உயரதிகாரிகளை நேரில் அழைத்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசித்தார்.

