அரியாங்குப்பம், மணவெளியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் உத்தரவு!
புதுச்சேரி: அரியாங்குப்பம் மற்றும் மணவெளி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பான அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் அரியாங்குப்பம் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமு ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில், அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்றி, அங்கு ஒரு வழி பார்க்கிங் முறையை அமல்படுத்த வேண்டும் எனவும், அரியாங்குப்பம் பைபாஸ் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தவளகுப்பம் நான்கு முனை சந்திப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் இடதுபுறம் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும், உழவர் சந்தையில் வியாபாரிகள் நலன் கருதி நடமாடும் கழிவறை அமைக்க வேண்டும் மற்றும் சேதமடைந்த சாலைகள், வாய்க்கால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஜிந்தா கோதண்டராமன், பக்தவச்சலம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயகமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
