டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு தீவிர நடவடிக்கைகள்: சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனை!

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது மற்றும் கொசு ஒழிப்பு தீவிரப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் ந.ரங்கசாமி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், குடியிருப்புப் பகுதிகள், நீர் தேங்கும் இடங்கள் ஆகியவற்றில் தீவிரமாக கொசு மருந்து தெளிக்கவும், சுகாதாரப் பணிகளை முடுக்கிவிடவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருந்துகள் மற்றும் சிகிச்சை உபகரணங்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நன்னீர் தேங்காதவாறு தூய்மையாகப் பராமரிக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற சுகாதாரத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.

