தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்துக்கு ரூ.344 கோடி சொத்து!
புதுச்சேரி, செப். 17:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் வாக்காளர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. இத்தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் 15 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே தீவிரப் போட்டி நிலவுகிறது.
வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திர விவரங்களின்படி, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் தனக்கு ரூ.344 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதில் அசையும் சொத்து மதிப்பு ரூ.120 கோடி, அசையா சொத்து ரூ.187 கோடி மற்றும் மரபு வழியாக வந்த அசையா சொத்து ரூ.37.2 கோடி அடங்கும். மேலும் இவருக்கு ரூ.129.66 கோடி கடன் உள்ளது. இவரது மனைவியின் பெயரில் ரூ.2.98 கோடி அசையும் சொத்தும், ரூ.2.62 கோடி அசையா சொத்தும் உள்ளது.
பிற முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களின்படி, காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் தமக்கு அசையும் சொத்து ரூ.90.57 லட்சம் மற்றும் அசையா சொத்து ரூ.8.51 கோடி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். திமுக வேட்பாளர் சேது செல்வத்திற்கு அசையும் சொத்து ரூ.5 லட்சமும், அவரது மனைவிக்கு ரூ.12.55 லட்சமும் உள்ள நிலையில் அசையா சொத்துக்கள் ஏதுமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம், தமக்கு ரூ.27.67 லட்சம் அசையும் சொத்தும் ரூ.1.65 கோடி அசையா சொத்தும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திக் குமார், தனக்கு அசையும் சொத்தாக ரூ.17.46 லட்சமும், அசையா சொத்தாக ரூ.20 லட்சமும், ரூ.4.5 லட்சம் கடனும் இருப்பதாகத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பிரகடனம் செய்துள்ளனர்.
