உப்பளம் இந்திரா காந்தி மைதானத்தில் இருளில் நடக்கும் தடகளப் போட்டி: மின்விளக்கு வசதி செய்ய அரசுக்கு கோரிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரி உப்பளத்தில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் தற்போது நடைபெற்று வரும் தென்னிந்திய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாத காரணத்தால் வீரர்கள் இருள் சூழ்ந்த மைதானத்தில் போட்டியிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய அளவிலான பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இத்தடகளப் போட்டிகள் உப்பளம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. ஆனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் மைதானத்தில் போதிய வெளிச்சம் தரும் மின்விளக்கு வசதிகள் முறையாக இயக்கப்படாததால் மைதானம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் போட்டிகளில் பங்கேற்கும் இளம் வீரர்கள் தடுமாறும் நிலையும், காயங்கள் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
எனவே, களத்தில் விளையாடும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் விளையாட்டு எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, உப்பளம் மைதானத்தில் தேவையான மின்விளக்கு வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.



