புதுச்சேரி வில்லியனூரில் புதிய முனைய ரயில் நிலையம்: மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை என துணைநிலை ஆளுநர் தகவல்!
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்கவும், நீண்டதூர விரைவு ரயில் சேவைகளை விரிவுபடுத்தவும் ஏதுவாக, வில்லியனூரில் புதிய முனைய ரயில் நிலையம் (Terminal Railway Station) அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சகம் தொடங்கியுள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பிரதான ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் மற்றும் முனையக் கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதில் உள்ள நடைமுறைச் சவால்களைக் கருத்தில் கொண்டு, அருகிலுள்ள வில்லியனூர் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில்வே முனையத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரிக்கு வரும் மற்றும் இங்கிருந்து புறப்படும் ரயில்களைப் பராமரிக்கவும், நிறுத்தவும் கூடுதல் இடவசதி கிடைக்கும்.
வில்லியனூரில் அமையவுள்ள புதிய முனைய ரயில் நிலையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது, நாட்டின் முக்கிய நகரங்களுக்குப் புதுச்சேரியில் இருந்து கூடுதல் விரைவு ரயில்களை இயக்க வழிவகுக்கும். இது புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் ரயில்வே தேவைகளை நிறைவேற்றுவதோடு, சுற்றுலா மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கும் பெரும் உந்துதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
