பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள்: சென்னை அண்ணா சாலையில் உள்ள சிலைக்கு சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை!

சென்னை, செப். 15: பேரறிஞர் அண்ணா அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சட்டப்பேரவை தலைவர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு. ஜே.சி.டி. பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G. அருண்ராஜ், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
மேலும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே. பிரபு, சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ.விஜய் தமிழன் பார்த்திபன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் R. குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் திரளாகப் பங்கேற்று பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.



