காரைக்காலில் சுகாதாரத்துறை இயக்குநர் தலைமையில் மருத்துவ பணிகள் ஆய்வுக் கூட்டம்: எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு!

காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு மருத்துவச் சேவைகள் மற்றும் மருத்துவமனைகளின் தற்போதைய கட்டமைப்புத் தேவைகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் டாக்டர் எஸ். செவ்வேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
இக்கூட்டத்தில் நிரவி–திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் மற்றும் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். மருத்துவமனைகளில் நிலவும் உள்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருந்து மாத்திரைகளின் இருப்பு, பொதுமக்களுக்குத் தடையின்றி வழங்கப்படும் தீவிர சிகிச்சை வசதிகள் மற்றும் அவசியமான மருத்துவ உபகரணங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் துறை அதிகாரிகளுடன் விரிவாகக் கேட்டறிந்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.
நோயாளிகளுக்கு எவ்வித குறைபாடும் இன்றி தரமான மருத்துவ சேவைகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த தலைமை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
