அரசுப் பள்ளி மாணவிகள் விவகாரம்: பப் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தும் அரசுக்கு திமுக அமைப்பாளர் சிவா கடும் கண்டனம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் மாணவர் சமுதாயத்தைச் சீரழிக்கும் பப் மற்றும் போதைக் கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தி வரும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசுக்கு புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் ஆர். சிவா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நகர்ப்புற அரசுப் பள்ளி ஒன்றில் மாணவிகள் வகுப்பறைக்கு மதுபோதையில் வந்ததாக வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்பாளருமான ஆர். சிவா, மாநிலத்தின் அமைதியான சூழலையும் பாரம்பரிய கல்விப் பெருமையையும் சீரழிக்கும் வகையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், புதுச்சேரியில் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி திறக்கப்பட்டு வரும் பப் மற்றும் மதுபானக் கூடங்களின் கலாச்சாரமே இளைய தலைமுறையினரை இத்தகைய தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் போதை கலாச்சாரத்தைத் தடுத்து நிறுத்தி, கல்விச் சூழலைப் பாதுகாக்க அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


