தமிழ்நாடு

பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு: “தமிழ்த்தாய் தன் அரும்புதல்வரை இழந்துவிட்டாள்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுக்குத் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் புகழஞ்சலியையும் தெரிவித்துள்ளார். சிரித்த முகம், சிந்தையைக் கவரும் எளிய தமிழ் மற்றும் மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற அவரது மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்ததாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், திருக்குறளுக்கு உரை கண்டவராகவும், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவராகவும், கம்பனை ஆய்ந்தறிந்தவராகவும் பண்டைத் தமிழிலக்கியத்தில் விற்பன்னராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்று சுட்டிக்காட்டியுள்ளார். பண்டிகை நாட்கள் அவரது பட்டிமன்றத்தோடு தொடங்கும் அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தவர் என்றும், பல்லாயிரம் பட்டிமன்றங்களை நடத்தி ‘பாப்பையா பரம்பரை’ என்று சொல்லத்தக்க அளவில் பல சிறந்த பேச்சாளர்களைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தந்தவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், தலைவர் கலைஞர் மீதும் தன் மீதும் பேராசிரியர் பாப்பையா கொண்டிருந்த மாறாத அன்பை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த முதலமைச்சர், கடந்த ஆண்டு மதுரை சென்றபோது அவரது இல்லத்தில் நேரில் சந்தித்ததை நினைவுகூர்ந்தார். தமிழ்த்தாய் தனது அரும் புதல்வர்களுள் ஒருவரை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மதுரை மக்களுக்கும், உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன