சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் நினைவைப் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

சென்னை, செப். 11: நாட்டின் விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது புகழஞ்சலியைச் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் சமரசமற்ற உறுதியான போராட்டங்களை முன்னெடுத்தவர் தியாகி இமானுவேல் சேகரனார். அவரது தன்னலமற்ற பணிகளும், ஈடு இணையற்ற தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது பயணத்திற்கு என்றென்றும் பெருந்துணையாக நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட ஆணை பிறப்பித்ததுடன், பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பது உள்ளிட்ட சிறப்பான பணிகளை திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் பாடுபட்ட இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் என்றும் நிலைத்திருக்கும் என முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.

