உழவர்கரை நகராட்சி அதிரடி: சாலையோரம் கைவிடப்பட்ட 9 வாகனங்கள் பறிமுதல்; ஏலம் விட ஆணையர் எச்சரிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள், நடைபாதைகள் மற்றும் சாலையோரங்களில் நீண்டகாலமாகக் கைவிடப்பட்ட 9 வாகனங்களை உழவர்கரை நகராட்சி நிர்வாகம் அதிரடியாகப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
சாலையோரங்களில் அனாதையாகக் கிடக்கும் வாகனங்களால் கடுமையான சுகாதாரச் சீர்கேடு மற்றும் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு நேரடி மேற்பார்வையில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் PY 01 BF 4380 (கார்), PY 01 D 3827 (ஆம்புலன்ஸ்), PY 01 CG 5361 (ஆம்புலன்ஸ்), PY 01 AS 5109 (கார்), PY 01 AK 9342 (ஆட்டோ), TN 32 D 1242 (டிராக்டர் மற்றும் டிரெய்லர்), KL 08 AT 9298 (கார்), PY 01 AU 7779 (கார்) மற்றும் பதிவு எண் இல்லாத ஒரு டிராக்டர் ஆகியவை அடங்கும்.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் ஒரு வார காலத்திற்குள் உழவர்கரை நகராட்சி ஆணையரை நேரில் அணுகி, உரிய அபராதத் தொகையைச் செலுத்தி, இனி பொது இடங்களில் வாகனங்களை நிறுத்த மாட்டோம் என எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்து வாகனங்களை மீட்டுச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிமை கோராத வாகனங்கள், சட்ட விதிகளின்படி பொது ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
