தாயின் வழியில் சாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் எதிரே செப். 4-ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியில் தாயின் வழியிலான சாதிச் சான்றிதழ் வழங்க மறுக்கப்படுவதைக் கண்டித்தும், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாத்திட வலியுறுத்தியும் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி (UEF) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) விடுத்துள்ள அழைப்பில், புதுச்சேரி என்.டி.ஏ அரசு தாயின் வழியில் சாதிச் சான்றிதழ் வழங்குவதை திட்டமிட்டு மறுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளது. இதனால் பட்டியலின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ-மாணவிகள் உயர்கல்வி சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும், அவர்களின் எதிர்காலம் பாழாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதியைப் பாதுகாக்கவும், மாணவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் செப்டம்பர் 4-ஆம் தேதி காலை 10 மணியளவில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) அழைப்பு விடுத்துள்ளன.

