புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதியில் தீவிர மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் அசோக் ஆனந்தன் தீவிர ஆலோசனை!

புதுச்சேரி, செப். 3:
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுவை முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்களின் உத்தரவின்பேரில், தட்டாஞ்சாவடி தொகுதி மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு அசோக் ஆனந்தன் இக்கூட்டத்தை முன்னெடுத்து நடத்தினார். இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் லோகநாதன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் நேரில் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தடையின்றி வெளியேறும் வகையில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை முழுமையாக சீரமைத்து தூர்வாருதல், பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தேவையான பகுதிகளில் புதிய சாலைகள் அமைத்தல் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பழுதடைந்த மற்றும் காய்ந்து பட்டுப்போன மரங்களை முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாப்பாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அசோக் ஆனந்தன் வலியுறுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன