பாகூரில் போலீஸார் மீது காரை ஏற்றித் தப்ப முயன்ற இருவர் கைது: நெக்சான் கார், பைக் பறிமுதல்!
புதுச்சேரி: புதுச்சேரி அருகே பாகூர் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது காரை மோதி ஏற்றிவிட்டுத் தப்பியோட முயன்ற 2 கொள்ளையர்களை போலீஸார் துணிச்சலாக விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர்.
பாகூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீஸார் தீவிர ரோந்துப் பணி மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை போலீஸார் நிறுத்த முயன்றனர். ஆனால், காரில் வந்த நபர்கள் வாகனத்தை நிறுத்தாமல், பணியில் இருந்த போலீஸார் மீது காரை ஏற்றிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பியோட முயன்றனர். உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட போலீஸார் காரைச் சினிமா பாணியில் விரட்டிச் சென்று சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
பிடிபட்ட 2 நபர்களிடமும் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் இருவரும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த ஒரு டாடா நெக்சான் கார் மற்றும் திருடப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
