காட்டேரிக்குப்பம் ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழா: அன்னதானம் வழங்கி மரக்கன்றுகள் நட்டார்!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
இவ்விழாவினை முன்னிட்டு திரு. G.D. சேகர் அவர்களின் ஏற்பாட்டில் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் நேரில் கலந்துகொண்டு துர்கை அம்மனை மனமுருக தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆலய வளாகத்தில் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கிய அமைச்சர் நமச்சிவாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

