புதுச்சேரியில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரி, செப். 02:
புதுச்சேரி அரசின் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB) இணைந்து நடத்திய முக்கிய ஆய்வுக் கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்கு NFDB தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிஜய் குமார் பெஹெரா தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் டி. மணிகண்டன் ஐ.ஏ.எஸ்., மீன்வளத்துறை இயக்குநர் ஏ. முகமது இஸ்மாயில் மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், புதுச்சேரி மீன்வளத்துறையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக, பிரதான் மந்திரி மத்சய சம்பதா யோஜனா (PM-MKSSY), மீன் வளர்ப்பு காப்பீடு, மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி (FIDF), படகு மற்றும் குழு விபத்து காப்பீடு (GAIS), மீனவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FFPO), மீன்வள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுச்சேரி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நீடித்த மீன்வள வளர்ச்சியை உறுதி செய்யவும் தேவையான எதிர்கால திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
