இந்திரா காந்தி சிலை – மூலக்குளம் சாலையில் தொடர் விபத்து: நிரந்தர தீர்வு காண எம்.எல்.ஏ. நாராயணசாமி வலியுறுத்தல்!
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் முதல் மூலக்குளம் வரையிலான முக்கிய சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால், அவற்றைத் தடுக்க அரசு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று உழவர்கரை தொகுதி என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கே. நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியின் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக விளங்கும் இந்திரா காந்தி சிலையிலிருந்து மூலக்குளம் வரை செல்லும் பிரதான சாலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர். இந்நிலையில், இந்த வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்படுவது வாகன ஓட்டிகளிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எம்.எல்.ஏ. நாராயணசாமி தெரிவிக்கையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் சாலை பாதுகாப்பு ஆய்வுகளை முறையாக மேற்கொண்டு, விபத்துகளை முற்றிலும் தடுக்கும் வகையில் உரிய சிக்னல்கள், தடுப்புகள் உள்ளிட்ட நிரந்தர கட்டமைப்பு தீர்வுகளை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
