புதுச்சேரி

தாயின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு பெற குழந்தைகளுக்கு உரிமை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

புதுச்சேரி: தந்தை வெளிமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட தாயின் சாதி மற்றும் பிறப்பிடத்தை அடிப்படையாக வைத்து பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு மற்றும் சாதிச் சான்றிதழ் வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கிய வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த பட்டியலின (SC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) வகுப்பைச் சேர்ந்த பெண்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்த நிலையில், அவர்களது பிள்ளைகளுக்குப் புதுச்சேரி அரசு பூர்வீகச் சான்றிதழ் தர மறுத்து ‘குடியேறியவர்’ என சான்றிதழ் வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, அரசின் இந்த நடைமுறை ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதாகவும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமைகளுக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஒரு குழந்தை எந்தச் சமூகப் பின்னணியில் வளர்ந்து சமூகப் புறக்கணிப்புகளையும் இன்னல்களையும் எதிர்கொள்கிறது என்பதே இடஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்க வேண்டும் என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. எனவே, மனுதாரர்களின் பிள்ளைகளுக்குத் தாயின் பூர்வீகத்தின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்கி, புதுச்சேரி அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உரிய இடஒதுக்கீட்டுப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன