மூத்த பத்திரிகையாளர் பாரிஸ் ரவி மறைவு: புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆழ்ந்த இரங்கல்!

புதுச்சேரி, செப். 01:
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் புகைப்படக் கலைஞருமான பாரிஸ் ரவி (எ) ரவிச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது:
“காரைக்கால் KL டிவியின் முன்னாள் செய்தி ஆசிரியரும், தற்போதைய டைமண்ட் தொலைக்காட்சியின் செய்தியாளரும், தின செய்தி நாளிதழ் மற்றும் புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறையின் புகைப்படக் கலைஞருமான பாரிஸ் ரவி என்கிற ரவிச்சந்திரன் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். பத்திரிகைத் துறையில் நீண்ட காலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளர் பாரிஸ் ரவியின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
காரைக்காலில் நடைபெறும் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க நான் செல்லும் போதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று நலம் விசாரிப்பது அவரது வழக்கம். காரைக்கால் பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகள், மக்கள் நலன், சமூக மேம்பாடு மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து என்னுடன் அக்கறையோடு பகிர்ந்துகொள்வார். மேலும், அவர் எடுக்கும் நேர்த்தியான புகைப்படங்களே அனைத்து நாளிதழ்களிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் சிறப்பு வாய்ந்தவை.
சமீபத்தில் காரைக்காலில் நடைபெற்ற மறைந்த புதிய தலைமுறை செய்தியாளர் ரஹ்மான் அவர்களின் திருவுருவப் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட போதுகூட, எனது அருகில் அமர்ந்து தன் நினைவுகளையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டது என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது. மூத்த பத்திரிகையாளர் பாரிஸ் ரவியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காரைக்கால் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சர் நமச்சிவாயம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)

