டெல்லியைப் போல் புதுவை அரசு ஊழியர் பென்ஷனை மத்திய அரசு ஏற்க வேண்டும்: சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தல்!

புதுச்சேரி: டெல்லியைப் போன்று புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் தொகையையும் மத்திய அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பேசிய அவர், ஒன்றியப் பிரதேசமான டெல்லியில் அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் தொகையை மத்திய அரசாங்கமே வழங்கி வருகிறது. அதே நடைமுறையை யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் ஏன் செயல்படுத்தக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி என இரட்டை இன்ஜின் அரசாக செயல்படும் நிலையில், இந்த நிதி உரிமையை மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு ஏன் கேட்டுப் பெறக் கூடாது என்று வினவினார். இக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்று ஓய்வூதியச் சுமையை ஏற்றால், புதுச்சேரி அரசுக்கு ஆண்டிற்கு சுமார் ரூ. 1,500 கோடி நிதி மிச்சமாகும் என்றும், அதன் மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



