புதுச்சேரி பள்ளிகளுக்கு 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் வாகனங்களில் வர தடை: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

புதுச்சேரி, 24/8/2026: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டி வருவதை முற்றிலும் தடை செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) ஆகியோர் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 19 அன்று சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை இந்த முக்கிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநர் முனைவர் வி.ஜி. சிவகாமி வெளியிட்டுள்ள உத்தரவில், “புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், 18 வயது பூர்த்தியடையாத மாணவர்கள் பைக், ஸ்கூட்டர், கார் உள்ளிட்ட எந்தவொரு மோட்டார் வாகனங்களையும் ஓட்டி பள்ளி வளாகத்திற்குள் கொண்டு வர அனுமதிக்கக் கூடாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டங்கள் மற்றும் வகுப்பறை நிகழ்வுகள் மூலம் உரிய வயதுக்கு முன்னதாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து அபாயங்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பைப் பெற வேண்டும் என்றும், இந்த வழிகாட்டுதல்களைப் பள்ளி நிர்வாகங்கள் தீவிரமாகக் கண்காணித்து அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



