ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு: புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் தீவிர கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்த உத்தரகாண்ட் பாஜக அரசைக் கண்டித்து, புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையை, ‘ஸ்ரீ ராம் சேனா தர்ம சேவா நியாஸ்’ அமைப்பினர் ‘சுத்திகரிப்பு’ யாகம் செய்து அவமதிப்புக்கு உள்ளாக்கினர். இச்செயலைக் கண்டித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினார். ஆனால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஹல்த்வானி கோட்வாலி காவல்துறையினர் ராகுல் காந்தி மீதே வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாஜக அரசின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும், ராகுல் காந்தி மீதான முதல் தகவல் அறிக்கையை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஓதியஞ்சாலை காவல்நிலையம் அருகே இக்கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

