புதுச்சேரி வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் அழைப்பு!
புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி அரசு ‘இரட்டை இன்ஜின்’ அரசின் துணையோடு அதிவேகத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக முன்வைக்கும் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் பாரபட்சமின்றி உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விடுபட்ட அல்லது தெரிவிக்கத் தவறிய பொதுமக்களின் அத்தியாவசியக் கோரிக்கைகளை, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ எனது கவனத்திற்கு கொண்டு வந்தால், அவையும் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றப்படும்” என்று அவர் உறுதியளித்துள்ளார்.
மத்தியில் ஆளும் அரசுடன் இணைந்து புதுச்சேரியில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உள்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.


