புதுச்சேரி அங்கன்வாடி குழந்தைகளுக்கு 2 ஜோடி சீருடை: அமைச்சர் சிவக்கொழுந்து அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட சுமார் 12,000 குழந்தைகளுக்கு தலா இரண்டு ஜோடி இலவச சீருடைகள் வழங்கப்படும் என்று குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், குழந்தைகளின் நலனை மேம்படுத்தவும் அவர்களின் கல்விச் சூழலை சிறப்பாக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்குவதற்காக சுமார் ரூ.60 லட்சம் செலவீன மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 150 சிசி (150cc) என்ஜின் திறன் கொண்ட சிறப்பு வாகனங்களை வழங்குவது தொடர்பாக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அதற்கான தகுந்த நடவடிக்கைகள் முறைப்படி எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சிவக்கொழுந்து தெரிவித்தார்.



