புதுச்சேரியில் 2 ஆண்டுகளாக ஹஜ் உதவித்தொகை வழங்கப்படவில்லை: சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று சட்டப்பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தில் இது குறித்துப் பேசிய அவர், “புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆண்டுதோறும் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த நிதி உதவி கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் முடங்கியுள்ளது. மேலும், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை வழங்கக் கூடாது. மாறாக, இதற்கெனத் தனியாக அரசுத் துறை வாயிலாகவே தனி நிதி ஒதுக்கீடு செய்து முறையாக வழங்கப்பட வேண்டும்” என்று திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
புனிதப் பயணம் செல்லும் இஸ்லாமியப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஹஜ் நிதி உதவியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இதற்கான நிரந்தர நிதி ஒதுக்கீட்டை புதுச்சேரி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அவையில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.