ஒப்பந்த ஆசிரியர்கள், பால சேவிகா பணியாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்க: பேரவையில் ஏ.எம்.எச். நாஜிம் ஆவேசம்!
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் (TGT) மற்றும் பால சேவிகா பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை முன்வைத்து ஆவேசமாகப் பேசிய அவர், “பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிகா பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எந்த நேரத்திலும் தங்களின் பணி பறிக்கப்படலாம் என்ற அச்ச உணர்வும், கத்தியும் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும்போது, அவர்களால் எவ்வாறு மாணவர்களுக்கு முழு மனதுடன் பாடம் சொல்லிக் கொடுக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், புதுச்சேரி மண்ணின் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆசிரியர்களின் நலனையும் மாணவர்களின் கல்வியையும் கருத்தில் கொண்டு, ஒப்பந்த முறையில் பணிபுரியும் அனைத்து விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பால சேவிகா ஊழியர்களையும் அரசு உடனடியாகக் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.