புதுச்சேரி: மழையால் சாலையில் சாய்ந்த மரம் – நள்ளிரவில் களமிறங்கி அப்புறப்படுத்திய விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ.!
புதுச்சேரி, ஆக. 29: புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட நீடராயப்பெயர் வீதியில் பெய்த மழையின் காரணமாக சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் நேரில் சென்று தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நள்ளிரவில் துரிதமாக அப்புறப்படுத்தினார்.
புதுச்சேரி பகுதியில் இரவு நேரத்தில் பெய்த மழையின் தாக்கத்தால், நீடராயப்பெயர் வீதியில் இரவு சுமார் 11.00 மணியளவில் மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைபட்டு, கடும் நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தகவலறிந்த சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு, சாலை முழுமையாகச் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நள்ளிரவிலும் உடனடியாக களம் கண்டு துரிதமாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறையினருக்கு சட்டமன்ற உறுப்பினர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

