அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் காவலர்கள், பெண் பணியாளர்களை நியமிக்க வேண்டும்: எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் வலியுறுத்தல்!

புதுச்சேரி, ஆக. 29: புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு பெண்கள் பள்ளிகளிலும் பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில், பள்ளிதோறும் பெண் காவலர்கள் மற்றும் முழுநேர பெண் பணியாளர்களை உடனே நியமிக்க வேண்டும் என்று விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ. அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் செயல்படும் அரசு பெண்கள் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு நலன்களுக்கு அரசு எப்போதும் முதலிடம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். பள்ளி வளாகங்களில் மாணவிகள் எந்தவித அச்சமுமின்றி பாதுகாப்பான மற்றும் நேர்மறையான சூழலில் கல்வி பயில்வதை உறுதி செய்வது அரசின் இன்றியமையாத பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக, அனைத்து அரசு பெண்கள் பள்ளிகளிலும் பெண் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதுடன், மாணவிகளின் அடிப்படை தேவைகள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களை உடனுக்குடன் கவனித்துக் கொள்ள முழுநேர பெண் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் என்று கூறினார். பள்ளி வளாகங்களில் பெண் ஊழியர்கள் பணியில் இருப்பது மாணவிகளுக்கு கூடுதல் மன தைரியத்தையும் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும் என்பதால், அரசு இக்கோரிக்கையை பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

