பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்: புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தல்!
புதுச்சேரி: புதுச்சேரி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளி நேரங்களில் இயக்கப்படும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பேசிய அவர், புதுவையில் காலை மற்றும் மாலை வேளைகளில் மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பரபரப்பான நேரங்களில் அதிகளவில் கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக எதிர்பாராத சாலை விபத்துகளும் நிகழ்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகி வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
எனவே, பள்ளி இயங்கும் முக்கிய நேரங்களில் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த உரிய போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விபத்துகளைத் தவிர்க்க யூ-டர்ன் (U-Turn) திட்டம் உள்ளிட்ட சிறப்பு சாலை பாதுகாப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அரசை அவர் வலியுறுத்தினார்.
