தேசியம்

வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் விண்வெளித் தொழில்நுட்பம்: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பிரதமர் மோதி அழைப்பு

புது தில்லி, ஆக. 21: வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் விண்வெளித் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டும் என்று ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார். புது தில்லியில் உள்ள சேவா தீர்த்தில், இந்தியாவைச் சேர்ந்த 20 முன்னணி விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது, விண்வெளித் தொழில்நுட்பம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். விண்வெளி சார்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தின் பலன்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளி மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ‘அடல் டிங்கரிங்’ ஆய்வகங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார். இத்தகைய முயற்சிகள், எதிர்கால சந்ததியினரை விண்வெளித் துறையில் ஈடுபட வைப்பதோடு, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன