சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்தகுளம்: 15 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரி சீரமைப்பு பணி

கடலூர் மாவட்டம், சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்தகுளத்தை, பொது தீட்சிதர்கள் நிர்வாகம் சார்பில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தூர்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சைவ சமயாச்சாரியர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் போற்றப் பெற்றதும், ஐம்பூதங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குவதும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலாகும். தரிசித்தால் முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், இதயஸ்தானம் என போற்றப்பெறும் திருத்தலமாகவும் விளங்குவது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரமாகும்.
இத்தலத்தில் நடராஜர் கோயிலில் சிவகங்கை தீர்த்தமும், சிவசக்தி வடிவமாகக் கருதப்படும் கிணறும் உள்ளது. உடற்பிணியால் வருந்திய சிங்கவர்மன் என்ற வேந்தன் இச்சிவகங்கை குளத்தில் நீராடியதால் உடற்பிணி நீங்கி பொன்னிறம் பெற்றதாக வரலாறு கூறுகிறது. நடராஜப் பெருமான் வீற்றிருக்கும் சித்சபைக்குப் பொற்கூரை அமைத்ததாகவும் வரலாறு கூறுகிறது.

