வேளாண் பட்ஜெட் ‘வெறும் பெயர் மாற்றம்’: பிரேமலதா விஜயகாந்த் கடும் அதிருப்தி
TVK அரசின் 2026-27 வேளாண் பட்ஜெட்டுக்கு, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் எதிர்ப்புப் பதிவு செய்துள்ளார். “விவசாயிகள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் இந்த வேளாண் பட்ஜெட்டில் இல்லை. நெல் மூட்டைகளைப் பாதுகாக்கும் சேமிப்புக் கிடங்குகள் பற்றியும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் புதிய ஏற்பாடுகள் பற்றியும் எந்தத் தகவலும் இல்லை” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பட்ஜெட் நாளில் சட்டப்பேரவைக்கு வெளியே பேசிய பிரேமலதா, “புதிய திட்டங்கள் என்று சொல்லப்படுபவை எல்லாம், பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் போட்ட மாதிரிதான்” என்று கூறினார்.
“நெல் மூட்டைகள் அழுகாமல் பாதுகாக்க, கிராமத்திலே கூடுதல் கிடங்குகள் தேவை. இது பற்றி ஒரு வரியாவது பட்ஜெட்டில் இருக்க வேண்டியதுதானே?” என்று கேள்வி எழுத்திய அவர், “குறிப்பாக 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கூடுதல் ஊதியம், வேலை நாட்கள் நீட்டிப்பு, பெண்களுக்குத் தனிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் — இவை பற்றி ஒரு அறிவிப்பாவது வரும் என விவசாயக் குடும்பங்கள் எதிர்பார்த்திருந்தன; ஆனால் எதுவும் இல்லை” என்றும் தெரிவித்தார்.
பிரேமலதாவின் இந்த விமர்சனம், வேளாண் பட்ஜெட் மீதான விவசாயிகளின் ஏமாற்ற உணர்வைப் பிரதிபலிக்கும் கருத்தாகப் பரவலாகப் பேசப்படுகிறது.