புதுச்சேரி மருத்துவப் படிப்புகள்: சென்டாக் இடஒதுக்கீட்டு விபரங்கள் வெளியீடு
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டு விபரங்களை சென்டாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் ஆயுர்வேத மருத்துவம் போன்ற நீட் தேர்வு அடிப்படையிலான படிப்புகளுக்கு மொத்தம் 6,023 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது மாணவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள 180 எம்.பி.பி.எஸ். இடங்களில், 131 இடங்கள் புதுச்சேரி மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரி பிராந்தியத்திற்கு 98 இடங்களும், காரைக்காலுக்கு 24 இடங்களும், மாகேவிற்கு 5 இடங்களும், ஏனாம் பிராந்தியத்திற்கு 4 இடங்களும் என இடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள இடங்களில் 27 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், 22 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களை சென்டாக் இணையதளத்தில் மாணவர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம்.


