தமிழ்நாடு

திருச்சி பழைய காவிரி பாலம் சீரமைப்புப் பணிகள் நிறைவு: நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் திறப்பு!

திருச்சி: திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான பழைய காவிரி பாலத்தின் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, நாளை (அக்டோபர் 15) மாலை 4 மணியளவில் பாலம் மீண்டும் பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துப் பயன்பாட்டிற்காக முறைப்படி திறக்கப்பட உள்ளது. பல மாதங்களாக நிலவி வந்த போக்குவரத்து சிரமங்களுக்குப் பிறகு பாலம் திறக்கப்பட இருப்பது திருச்சி பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழைய காவிரி பாலத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், கட்டமைப்புப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும் சிறப்புப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இதற்காக கடந்த 25.06.2026 அன்று பாலம் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்பட்டது. சுமார் மூன்று மாத கால அவகாசத்திற்குள் அனைத்துப் பணிகளையும் தரமாக நிறைவு செய்து, பாலத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்திருந்தனர்.

திட்டமிட்ட பணிகளுடன் கூடுதலாக சில கட்டமைப்புச் சீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ள வேண்டியிருந்ததால், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் மேலும் ஐந்து நாட்கள் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. பாலம் மூடப்பட்டிருந்த காலகட்டத்தில் மாற்றுப் பாதைகளில் அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் பணிகள் துரிதமாக நடைபெறுவதை உறுதி செய்ய நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

தற்போது அனைத்து விதமான மராமத்து, தார்ச்சாலை மற்றும் சீரமைப்புப் பணிகள் தரப் பரிசோதனைகளுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து, திட்டமிட்டபடி நாளை மாலை 4 மணி முதல் பழைய காவிரி பாலத்தில் வாகனப் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன