தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்: பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 18: தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்யை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழக அரசின் 100 நாள் வெற்றிகரமான ஆட்சியைப் பாராட்டியதோடு, ஐந்தாண்டு கால ஆட்சிக்கான முழு ஆதரவையும் அவர்கள் உறுதிப்படுத்தினர். இந்தச் சந்திப்பின் போது, சமீபத்தில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டின் தீர்மானங்களை முதலமைச்சரிடம் வழங்கினர்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளித்து அரசு தீர்மானம் கொண்டு வந்ததற்கும், நாடாளுமன்ற தொகுதி வரையறை விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒற்றுமையை வெளிப்படுத்தியதற்கும் முதலமைச்சருக்குத் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்தனர். மாநில சுயாட்சியை வலியுறுத்தியும், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் வழியில் மாநில உரிமைகளைப் பாதுகாக்க வலுவான குரலை எழுப்ப வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மேகமலை பகுதியில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் மக்களை வெளியேற்றக் கூடாது என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகச் சீராய்வு மனுவை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரினர். அமுதன் படுகொலை விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தனி அதிரடிப்படை உருவாக்கப்பட வேண்டும் என்றும் இச்சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

