புதுச்சேரியைச் சேர்ந்த எய்ம்ஸ் பேராசிரியர் டாக்டர் அருண் பாபுவுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் வழங்கிக் கௌரவிப்பு!

புதுச்சேரி, செப். 07: புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல மருத்துவக் கல்வியாளரும், மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தை நலப் பேராசிரியருமான டாக்டர் அருண் பாபுவுக்கு, 2026-ஆம் ஆண்டிற்கான ‘தேசிய நல்லாசிரியர் விருது’ வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தலைநகரில் நடைபெற்ற விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் இவ்விருதினை வழங்கி கௌரவித்தார்.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர் அருண் பாபு, புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவக் கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் (MBBS) மற்றும் எம்.டி (MD) மருத்துவப் பட்டங்களைப் பெற்றார். இவர் மேனாள் வங்கி அதிகாரி திரு. விஜயன் அவர்களின் மருமகன் ஆவார்.
தற்போது ஆந்திரப் பிரதேசம் மங்களகிரியில் அமைந்துள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவத் துறைப் பேராசிரியராகவும் மற்றும் துறைத் தலைவராகவும் (HOD) பணியாற்றி வருகிறார். மருத்துவக் கற்பித்தல் மற்றும் மருத்துவ ஆய்வுகளில் அவர் ஆற்றிய தனித்துவமான பணிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ள டாக்டர் அருண் பாபுவுக்கு புதுச்சேரி மக்கள் மற்றும் மருத்துவத் துறையினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



