புதுச்சேரியில் தற்காலிக பட்டாசுக் கடை உரிமத்துக்கு ஆகஸ்ட் 12 முதல் விண்ணப்பம்
தீபாவளி 2026-ஐ முன்னிட்டு புதுச்சேரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விரும்புவோர், ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 7 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் swscollectorate.py.gov.in இணையதளத்தில் உள்ள ‘AE5 – Temporary Crackers Shop License Application for Deepawali 2026’ சேவையின் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்துடன் பட்டாசுக் கடை அமைக்கப்பட உள்ள இடத்தின் வரைபடம், கடையில் பட்டாசுகள் வைக்கப்படும் அறை, அணுகும் சாலை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்புகள் பற்றிய விவரங்களை இணைக்க வேண்டும். இடத்தின் உரிமை ஆவணங்கள் அல்லது வாடகை ஒப்பந்தம், கடை அமைக்க நில உரிமையாளருக்கு ஆட்சேபனை இல்லை என்பதற்கான நோட்டரி உறுதிமொழிப் பத்திரம், விண்ணப்பதாரரின் முகவரி மற்றும் அடையாளச் சான்றுகளும் கட்டாயம்.
காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்தாலும், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பிற தகுதிநிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பட்டாசுக் கடை உரிமம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

