மீனவர்கள் மற்றும் பால்வளத்துறை மேம்பாட்டுக்கு சிறப்பு நிதி: மத்திய இணையமைச்சரிடம் மனு!

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகெலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சிறுமாதிரி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த டிஜிட்டல் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீன் விற்பனை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குதல், கடலோரப் பகுதிகளில் அதிநவீன மீட்புக் குழுக்களை அமைத்தல், மீன்பிடி துறைமுகங்களை நவீனமயமாக்குதல், மீனவர் ஓய்வூதியத் திட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பழுதடைந்துள்ள சுனாமி குடியிருப்பு வீடுகளை உடனடியாக மறுசீரமைத்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், கால்நடை மற்றும் பால்வளத் துறையை மேம்படுத்த நவீன கால்நடை மருத்துவமனைகள், பயிற்சிக் கல்லூரி அமைத்தல், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குதல் மற்றும் புதுச்சேரியின் முன்னணி கூட்டுறவு நிறுவனமான ‘பாண்லே’ (PONLAIT) அமைப்பை வலுப்படுத்தி பால் உற்பத்தியை பெருக்கத் தேவையான சிறப்பு நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் விரிவாகக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
