கருவடிக்குப்பம் பாத்திமா பள்ளியில் 500 பனை விதைகள் நடும் இயக்கம்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்பு!

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட கருவடிக்குப்பம் பாத்திமா உயர்நிலைப் பள்ளியில், மார்ட்டின் அறக்கட்டளை மற்றும் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் 500 பனை விதைகள் நடும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மார்ட்டின் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பனை விதைகளை நட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடையே உரையாற்றிய அவர், பனை மரங்களின் மருத்துவ மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாப்பதில் பனை மரங்களின் பங்கு ஆகியவை குறித்து விரிவாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், காமராஜ் நகர் தொகுதி முழுவதும் பசுமையை மீட்டெடுக்கும் வகையில் தொடர்ந்து 2,000-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் பாத்திமா உயர்நிலைப் பள்ளி முதல்வர் அருட்தந்தை மகிமை, பனை ஆர்வலர் ஆனந்தன், ‘பீயிங் புதுச்சேரி’ சுப்பிரமணியம் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

