புதுச்சேரி

புதுச்சேரியில் புரட்சிக் கவிஞர் தமிழ்ஒளிக்கு முழு உருவச் சிலை அமைக்க வேண்டும்: முனைவர் நா. இளங்கோ வலியுறுத்தல்!

புதுச்சேரி:
புதுச்சேரி ஈரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் கவிஞர் தமிழ்ஒளி கல்வி வட்டத்தின் 242-வது அமர்வு தோழர் லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது. இவ்வமர்வில் “தமிழ்ஒளி கவிதைகளில் சமூகமும் அரசியலும்” என்னும் தலைப்பில் பாவலர் சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கருத்துரை வழங்கிய பேராசிரியர் முனைவர் நா. இளங்கோ, புதுச்சேரி மண்ணின் மாபெரும் படைப்பாளியான கவிஞர் தமிழ்ஒளிக்கு அரசு சார்பில் உரிய இடத்தில் சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்வில் முனைவர் நா. இளங்கோ பேசுகையில், “கவிஞர் தமிழ்ஒளி கல்வி வட்டம் பலமுறை அரசிடம் வலியுறுத்தியும் தமிழ்ஒளிக்குச் சிலை அமைப்பதில் தொடர்ந்து சுணக்கம் நிலவுகிறது. புதுச்சேரியில் பல்வேறு தலைவர்களுக்கு முக்கியமான சாலைச் சந்திப்புகளில் சிலைகள் உள்ள நிலையில், ஒடுக்கப்பட்ட சமூக ஆளுமைகளின் சிலைகள் மட்டுமே புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுகிறது. தான் ஏற்றுக்கொண்ட பொதுவுடைமைக் கொள்கைக்காகவே இறுதி மூச்சு வரை வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற கவிஞர் தமிழ்ஒளி ஆவார். அவருக்கு அரசு மரியாதையோடு தகுந்த இடத்தில் சிலை அமைக்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும், தமிழ்ஒளியின் இலக்கிய பங்களிப்புகள் மற்றும் புரட்சிகர கருத்துக்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில், தமிழ்ஒளி கல்வி வட்டத்தின் சார்பில் பிரம்மாண்ட ஆய்வரங்கம் நடத்தப்பட்டு, அது தனி நூலாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன