புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நவீன அங்காடி வளாகம்: முதல்வர் ரங்கசாமி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்!
புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள சுபேர் அங்காடி, பழைய சிறைச்சாலை வளாகம் மற்றும் நெல்லுமண்டி வளாகங்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய நவீன அங்காடி வளாகமாக மறுவளர்ச்சி செய்வது தொடர்பான உயர்நிலைக் குழுக் கூட்டம் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை ஐஐடி (IIT Madras) நிபுணர்கள் தயாரித்த நவீன அங்காடித் திட்டத்தின் விரிவான கருத்துரு, மாதிரி வரைபடங்கள் மற்றும் 3டி (3D) காட்சிகள் முதல்வர் மற்றும் துறைசார்ந்த உயர் அதிகாரிகளுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டன. இந்த வளாகத்தில் அமையவுள்ள நவீன வசதிகள், கடைகளின் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வழிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, அப்பகுதியில் தற்போது தொழில் செய்து வரும் வியாபாரிகள் மற்றும் தொடர்புடைய அனைத்துப் பங்குதாரர்களிடமும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கட்டாயம் கேட்டறிய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய வணிகப் பகுதிகளைத் தரம் உயர்த்தி, பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் தேவையான அனைத்து நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை அமைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
