புதுச்சேரி சென்டாக் நீட் இளநிலை படிப்பு: 3-ம் கட்ட கலந்தாய்வு தகுதிப் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி, 08/10/2026:
புதுச்சேரி அரசின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் மத்திய கலந்தாய்வுக் குழு (சென்டாக்), நீட் இளநிலை (UG NEET) மருத்துவப் படிப்புகளுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு தகுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினர் ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) ஒதுக்கீடுகளுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.வி.எஸ்.சி மற்றும் ஏ.எச். (தேசிய – SS & NRI), பி.ஏ.எம்.எஸ். (BAMS) படிப்புகளுக்கான 3-ம் கட்ட தகுதிப் பட்டியல் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் மற்றும் 3-ம் கட்ட கலந்தாய்வுக்கு விருப்பம் தெரிவித்து பதிவுக் கட்டணம் செலுத்தியவர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இப்பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது புகார்கள் இருப்பின், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையதள லாகின் மூலம் ‘Grievances’ பிரிவின் கீழ் 09/10/2026 காலை 11.00 மணிக்குள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய சுற்றுகளில் சேர்ந்த மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை எனில் ஏற்கனவே சேர்ந்த இடத்திலேயே தொடருவர் என்றும், பாடப்பிரிவு விருப்பங்களை (course preferences) பதிவு செய்யாதவர்கள் ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமும் அனுப்பப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு 0413-2655570, 2655571 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
