புதுச்சேரி கடற்கரையில் கண்கவர் காற்றாடி திருவிழா: வானில் மிதந்த பிரம்மாண்ட வண்ணப் பட்டங்கள்!

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற கண்கவர் காற்றாடி திருவிழா (Pondy Kite Festival) பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.
கடற்கரை காந்தி சிலை வளாகப் பகுதியில் வானில் பல்வேறு வடிவங்களிலான பிரம்மாண்ட பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. குறிப்பாக பாண்டா கரடி, புலிகள், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கார்ட்டூன் கதாபாத்திரங்களின் வடிவங்களில் அமைக்கப்பட்ட முப்பரிமாண (3D) வண்ணக் காற்றாடிகள் நீல வானில் அசைந்தாடிப் பறந்த காட்சி காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியது.
கடற்கரைக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் இந்த வண்ணமயமான காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இக்கண்கவர் காற்றாடி திருவிழா நாளையும் தொடர்ந்து புதுச்சேரி கடற்கரையில் நடைபெற உள்ளது.