கடலூர்: அரசு ஐடிஐ மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம் செம்மண்டலத்தில் உள்ள அரசு ஐடிஐ கல்லூரியில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் உத்ராம்மாள் மற்றும் காவல்துறை குழுவினர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது மற்றும் சமூக விரோத செயல்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விரிவாக விளக்கினர். குறிப்பாக, பெண்கள் அவசர காலங்களில் பயன்படுத்த வேண்டிய ‘காவலன்’ உதவி செயலி (Kavalan SOS) மற்றும் 1091 ஆகிய அவசர உதவி எண்கள் குறித்து மாணவ மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அரசு ஐடிஐ மாணவ மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தயங்காமல் காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும் என்றும், தைரியமாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. காவல்துறை அதிகாரிகளின் இந்த விழிப்புணர்வு முயற்சிக்கு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

