இலவசத் திட்டங்களை அறிவிக்கும் முன் நிதி ஆதாரங்களை உறுதி செய்ய வேண்டும்: புதுச்சேரியில் நிர்மலா சீதாராமன் பேச்சு
புதுச்சேரி, 26/9/2026:
அரசுகள் நலத்திட்டங்கள் மற்றும் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் போது, அவற்றை ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து செயல்படுத்த போதிய நிதி ஆதாரம் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்து திட்டமிட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற ‘பாரத் சக்தி பாண்டி லிட் ஃபெஸ்ட் 2026’ இலக்கியத் திருவிழாவின் தொடக்க நாள் கலந்துரையாடல் நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது இலவசங்கள் மற்றும் அரசின் நிதி மேலாண்மை குறித்து விரிவாகப் பேசிய அவர், மத்திய அரசோ அல்லது மாநில அரசோ எந்த அரசாக இருந்தாலும் சரி, இலவச நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன் போதிய நிதி ஆதாரம் உள்ளதா என்பதை நடுநிலையோடு பரிசீலிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசு செயல்படுத்த நினைக்கும் நலத்திட்டங்களுக்கு பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதைத் தொய்வின்றி நடத்த நிதி வளம் உள்ளதா என்பதை முதலில் கணக்கிட வேண்டும். அத்தகைய முறையான நிதி ஆதாரம் மற்றும் நீடித்த தன்மை இருந்தால், அதனை வெறும் இலவசங்கள் என்ற பிரிவில் சேர்க்க வேண்டியதில்லை. மாறாக முறையான திட்டமிடல் இல்லாத இலவசங்களால் அரசு நிதி நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், வரி வருவாயில் 80 சதவீதம் கட்டாயச் செலவினங்களுக்கே சென்றுவிடும் சூழலில், மீதமுள்ள 20 சதவீத நிதியைக் கொண்டே பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுதல் மற்றும் கட்டமைப்பு மேம்பாடுகள் போன்ற மூலதனப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் முறையான திட்டமிடல் இல்லாத இலவசங்களால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். உபரி வருவாய் கொண்ட சில மாநிலங்கள், இலவசத் திட்டங்களை அமல்படுத்திய மூன்றே ஆண்டுகளில் கடுமையான நிதிப் பற்றாக்குறைக்கு தள்ளப்பட்டு, மாநில மொத்த உற்பத்தியில் 3 சதவீத கடன் வரம்பையும் தாண்டி கடன் வாங்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அரசுகள் தங்களின் வருவாய் ஆதாரங்களைப் பன்முகப்படுத்த வேண்டும் என்றார்.
யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் மீதான வணிகர் தள்ளுபடி கட்டணம் (MDR) குறித்து விளக்கம் அளித்த அமைச்சர், இது வரி, கூடுதல் கட்டணம் அல்லது செஸ் கிடையாது என்றும், இது முழுக்க வணிகருக்கும் சேவை வழங்குநருக்கும் இடையேயானது என்பதால் சாமானிய நுகர்வோரைப் பாதிக்காது என்றும் கூறினார். மத்திய அரசு எப்போதும் மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்கவே முயன்று வருகிறது என்றார். இறுதியாக, ஐடிஐ (ITI) மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கியும், ஒடிசா, அசாம் தவிர பெரும்பாலான மாநிலங்கள் இதனைப் பயன்படுத்த முன்வராதது ஏமாற்றமளிப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

