புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் பெ.ராஜவேலு மாலை அணிவித்து மரியாதை!

புதுச்சேரி: புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு, கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பெ.ராஜவேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு, வாரந்தோறும் திங்கள்கிழமை திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் தொடர் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற இன்றைய நிகழ்விற்கு தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். செயலர் கல்விச்செம்மல் சீனு. மோகன்தாசு வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பெ.ராஜவேலு, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, திருக்குறள் கூறும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் திருக்குறள் நூல்களை அவர் வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ்ச் சங்கப் பொருளாளர் கலைமாமணி மு.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் ப.திருநாவுக்கரசு, கோதண்டபாணி, துணைச் செயலாளர் பொறியாளர் மு.சுரேஷ்குமார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முனைவர் இரா.அருள்ராஜ், கலைமாமணி எம்.எஸ். ராஜா, அ.சிவேந்திரன், ஜெயந்தி ராஜவேலு, ஆனந்தராசன் மற்றும் தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

