ஜிப்மரில் மருத்துவக் கல்வியியல் தேசியப் பயிற்சி முகாம்: விண்ணப்பிக்க அழைப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்வித் துறையின் சார்பில் சுகாதாரத்துறை பேராசிரியர்களுக்கான 95-வது தேசிய அளவிலான கல்வியியல் அறிவியல் பயிற்சி முகாம் (95th National Course on Educational Science for Teachers of Health Professionals) வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஜிப்மர் மருத்துவக் கல்வித் துறைத் தலைவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
சுகாதாரத் துறை சார்ந்த பேராசிரியர்களுக்கான 95-வது தேசிய அளவிலான கல்வியியல் பயிற்சி முகாம் நேரடி வகுப்புகளாக 6 முழு நாட்கள் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி முகாம் 2026 செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 26 வரை ஜிப்மர் வளாகத்தில் நடைபெறும்.
இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சுகாதார ஆசிரியர்கள், உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தங்களின் துறைத் தலைவர்கள் (HoD) வழியாக சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களின் ஸ்கேன் நகலை nttc.jipmer@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 2026 ஜூலை 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கட்டணமாக ரூ.6,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு கடிதம் பெற்ற பின்னரே ‘SBI Collect’ வாயிலாக கட்டணத்தைச் செலுத்த வேண்டும். செலுத்தப்பட்ட கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்படாது. குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே உள்ளதால் ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி வகுப்புகள் காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், மதியம் 2.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெறும். பயிற்சி நிறைவுச் சான்றிதழ் பெற அனைத்து நாட்களிலும் அனைத்து அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்பது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

