காரைக்கால்

காரைக்காலில் திடீர் குழாய் உடைப்பு: சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்!

காரைக்கால்: காரைக்கால்–திருநள்ளாறு சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறையின் மத்திய மண்டல குடிநீர் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட திடீர் குழாய் உடைப்பு காரணமாக, சாலையில் குடிநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் நகரின் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் இந்த மையத்தில், இன்று நண்பகல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் பிரதான குழாயில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது நீரின் அதிக அழுத்தம் தாங்காமல் பிரதான ரப்பர் வால்வு திடீரென வெடித்து உடைந்தது. இதனால் நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து வெளியேறிய குடிநீர் பொதுப்பணித்துறை வளாகத்தை மூழ்கடித்து, காரைக்கால்–திருநள்ளாறு பிரதான சாலையிலும் வெள்ளம்போல் பாய்ந்தோடியது.

மழையே இல்லாத சூழலில் சாலையில் திடீரென தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதைக் கண்டு வாகன ஓட்டிகள் ஆச்சரியமடைந்தனர். தகவலறிந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாது எனவும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன